“ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்” என்பதால் அதனை வீதிதோறும், வீடுதோறும் சென்று, அதைச் சேர்க்கத் துணைபுரியும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கைக்கொண்டுள்ள பல சாதனைகளில், உத்திகளில், செயல்பாடுகளில் நடமாடும் தருமச்சாலையும் ஒன்று.
வசதியற்ற ஏழைக்குடும்பங்கள் வேளச்சேரி, கல்குட்டை போன்ற இடங்களில் பிளாஸ்டிக் அல்லது தகரத்தால் ஒரு கூரை, கிழிந்த புடவையைக் கதவாக நினைத்துத் தொங்குகின்ற வீடுகள். பறவைக்கூடு போல கதவில்லை, கழிப்பறையில்லை, அடுத்த வேளைக்கு உணவுமில்லை. சிறுகுழந்தைகளை வைத்துள்ள குடும்பத்தலைவிகள் நமது நித்ய தீப தருமச்சாலைக்கு வந்து போக முடியுமா? வீதிகளில் நாம் பார்க்கும் பார்வையற்றோர், கைகால் ஊனமுற்றோர், முதியோர், பசியால் வாடுபவர்கள், இவர்கள் நித்ய தீப தருமச்சாலைக்கு வந்து போக முடியுமா?
உலக அளவிலான ஒரு தொண்டு நிறுவனம் சிறுவர்களின் நலத்திலும், கல்வியிலும் அக்கறை செலுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அது ஒரு தகவல் வெளியிட்டது. ஒரு குடிசைப் பகுதியில் 10 வயதுள்ள இரண்டு பையன்களைப் பேட்டி காணும்போது, உங்கள் ஆசை என்ன என்று கேட்டபோது, நாங்கள் சாகாமல் இருக்க ஆசைப்படுகிறோம் என்றார்கள்! உங்களுக்கு ஏன் இந்தப் பயம் வந்தது? எனக்கேட்டபோது, இந்த சந்தில் நாங்கள் பத்து நண்பர்கள் இருந்தோம். காலை முதல் இரவு வரை ஒன்றாகவே எங்கும் திரிவோம். ஆனால் இந்த ஓராண்டில் எட்டு பேர் இறந்துவிட்டனர். ஏதேதோ நோய் காரணம் என்றார்கள்! ஆரோக்கியமான உணவு இல்லாததே இதற்குக் காரணம் எனக் கண்டறிந்து அத்தொண்டு நிறுவனம் பல கோணங்களில் செயல்படத் தொடங்கிற்று.
நம்மைப்பொறுத்தவரை ஆரோக்கியமான உணவு தேவைதான். கிடைத்தால் சந்தோஷம்தான். ஆனால் பசிக்கு உணவு, சாதாரண உணவு கிடைப்பதே அரிதாகிக்கொண்டிருக்கிறது. இதைக்கண்ட வள்ளலார், “ஒருவர் கஷ்டப்படுவதைக் கண்ட போதாயினும், கேட்டபோதாயினும், அறிந்த போதாயினும் ஓடிச்சென்று அதை நிவர்த்திக்க வேண்டும்” என்பதாகச் சொல்கிறார். இதை ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் காணலாம். அந்த உரைநடையில் அவர் சொன்னதை நடைமுறையில் கொண்டுவர “நடமாடும் தருமச்சாலை” ஒன்றை தீபம் அறக்கட்டளை உருவாக்கி, கடந்த 10 ஆண்டுகளாக பசித்தவர்களுக்கு அன்னம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
