தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகர் வேளச்சேரியில் 1997-ம் ஆண்டு முதல் பசியால் வாடும் துயர் அறிந்து சிறு சேவையாகத் தொடங்கி, 2007-ம் ஆண்டு ஓர் அரசு பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனமாக தீபம் அறக்கட்டளை அன்று முதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினசரி நித்ய தீப தருமச்சாலை வாயிலாகவும், நடமாடும் தருமச்சாலை வாயிலாகவும், தமிழகம் முழுவதும் 11 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையாலும், தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின் பெருந்தயவாலும், ஓயாது உழைக்கின்ற ஆடுகின்ற சேவடிகளின் கடுமையான உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.
- 1997வேளச்சேரியில் அன்னதானச் சேவை தொடக்கம்
- 2007அரசு பதிவு பெற்ற அறத்தொண்டு நிறுவனம்
- 11தமிழகம் முழுவதும் தருமச்சாலைகள்
அன்னதான அற்புதங்கள்
காலை கஞ்சி
பசியாற்றுவிக்க நினைப்பவன் -மனிதன்
பசியாற்றுவிப்பவன் -மாமனிதன்
பசியாறியவர்களைக் கண்டு மகிழ்பவன் -மகான்
பசியாறியவர்களால் பாராட்டப்படுபவன் -கடவுள்
வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாட்டில் 11 தருமச்சாலைகளின் மூலம் தினசரி நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், ஆதரவற்ற அன்பு உள்ளங்களுக்கும் மனிதநேய உள்ளன்போடு, நூற்றுக்கணக்கான ஆன்மநேய அருளாளர்களின் அன்போடும், தயவோடும் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், மூலிகை கஞ்சி (புதினா, மிளகு, திப்பிலி, இஞ்சி, சீரகம் கலந்த கஞ்சி) வழங்கப்படுகிறது.
நடமாடும் அன்னதானம்
“ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்” என்பதால் அதனை வீதிதோறும், வீடுதோறும் சென்று, அதைச் சேர்க்கத் துணைபுரியும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கைக்கொண்டுள்ள பல சாதனைகளில், உத்திகளில், செயல்பாடுகளில் நடமாடும் தருமச்சாலையும் ஒன்று.
வசதியற்ற ஏழைக்குடும்பங்கள் வேளச்சேரி, கல்குட்டை போன்ற இடங்களில் பிளாஸ்டிக் அல்லது தகரத்தால் ஒரு கூரை, கிழிந்த புடவையைக் கதவாக நினைத்துத் தொங்குகின்ற வீடுகள். பறவைக்கூடு போல கதவில்லை, கழிப்பறையில்லை, அடுத்த வேளைக்கு உணவுமில்லை. சிறுகுழந்தைகளை வைத்துள்ள குடும்பத்தலைவிகள் நமது நித்ய தீப தருமச்சாலைக்கு வந்து போக முடியுமா? வீதிகளில் நாம் பார்க்கும் பார்வையற்றோர், கைகால் ஊனமுற்றோர், முதியோர், பசியால் வாடுபவர்கள், இவர்கள் நித்ய தீப தருமச்சாலைக்கு வந்து போக முடியுமா?
உலக அளவிலான ஒரு தொண்டு நிறுவனம் சிறுவர்களின் நலத்திலும், கல்வியிலும் அக்கறை செலுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அது ஒரு தகவல் வெளியிட்டது. ஒரு குடிசைப் பகுதியில் 10 வயதுள்ள இரண்டு பையன்களைப் பேட்டி காணும்போது, உங்கள் ஆசை என்ன என்று கேட்டபோது, நாங்கள் சாகாமல் இருக்க ஆசைப்படுகிறோம் என்றார்கள்! உங்களுக்கு ஏன் இந்தப் பயம் வந்தது? எனக்கேட்டபோது, இந்த சந்தில் நாங்கள் பத்து நண்பர்கள் இருந்தோம். காலை முதல் இரவு வரை ஒன்றாகவே எங்கும் திரிவோம். ஆனால் இந்த ஓராண்டில் எட்டு பேர் இறந்துவிட்டனர். ஏதேதோ நோய் காரணம் என்றார்கள்! ஆரோக்கியமான உணவு இல்லாததே இதற்குக் காரணம் எனக் கண்டறிந்து அத்தொண்டு நிறுவனம் பல கோணங்களில் செயல்படத் தொடங்கிற்று.
நம்மைப்பொறுத்தவரை ஆரோக்கியமான உணவு தேவைதான். கிடைத்தால் சந்தோஷம்தான். ஆனால் பசிக்கு உணவு, சாதாரண உணவு கிடைப்பதே அரிதாகிக்கொண்டிருக்கிறது. இதைக்கண்ட வள்ளலார், “ஒருவர் கஷ்டப்படுவதைக் கண்ட போதாயினும், கேட்டபோதாயினும், அறிந்த போதாயினும் ஓடிச்சென்று அதை நிவர்த்திக்க வேண்டும்” என்பதாகச் சொல்கிறார். இதை ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் காணலாம். அந்த உரைநடையில் அவர் சொன்னதை நடைமுறையில் கொண்டுவர “நடமாடும் தருமச்சாலை” ஒன்றை தீபம் அறக்கட்டளை உருவாக்கி, கடந்த 10 ஆண்டுகளாக பசித்தவர்களுக்கு அன்னம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
வடலூர் சேவை
ஒவ்வொரு மாதமும் பூச நன்னாளில் வடலூர் சத்திய தருமச்சாலையில் சேவை செய்ய சேவாதாரிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். பூசத்திற்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கு வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் இருந்து வாகனம் வடலூர் செல்லும்.
குழந்தைகள் இல்லங்கள்
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மகிழ்வித்து மகிழ்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளையும், முதியோர்களையும் மகிழ்விக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் வழங்கி மகிழ்விப்பது வழக்கம்.
தருமச்சாலைகள்
தமிழகம் முழுவதும் 11 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையாலும், தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின் பெருந்தயவாலும், ஓயாது உழைக்கின்ற சேவடிகளின் கடுமையான உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.
மெய்யூர்
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை நாளொன்றுக்கு ₹3,000 வீதம் (மாதம் ₹90,000) கிராம சேவையாக, சத்தான, சூடான, சுகாதாரமான, சுவையான, 2 வேளை உணவு வழங்குகிறது.
தெரு விளக்குகள் இல்லாத, காப்பு காடுகளை ஒட்டிய, மிகவும் பின்தங்கிய கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கும் காட்சி…
தினசரி குழந்தைகளின் பசி போக்க தொடர் மாதாந்திர கருணைமாநிதி வாரி வழங்கும் மனித தெய்வங்களின் திருப்பாதங்களை வணங்குகிறோம்.
அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அர்ப்பணம்.
குழந்தைகள், முதியோர் மற்றும் மனநலம் குன்றியோர் இல்லங்கள்
ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்வித்து சிறப்பு உணவு அளிக்கப்படுகிறது.
சாலையோர ஏழைகளுக்கு உணவு
நடமாடும் அன்ன தருமச்சாலையின் ஒரு பகுதியாக விடுமுறை நாட்களில் சமைத்த உணவுகளை வாகனத்தில் எடுத்து சென்று சாலை ஓரங்களில் இருப்பவர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது.
கோயில் பக்தர்களுக்கு உணவு
வேளச்சேரி பகுதியில் உள்ள கோவில்களுக்கு திருவிழாக் காலங்கள், கூட்டு வழிபாடு மற்றும் சிறப்பு நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல வகையான அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.
சன்மார்க்க சங்கங்களுக்கு உணவு
சன்மார்க்க சங்கங்கள் நடத்தும் கூட்டங்கள், சத்சங்கங்கள் மற்றும் சன்மார்க்க விழாக்களுக்கு சிறப்பு உணவு அளிக்கப்படுகிறது.
