வசதியற ஏழைக்குடும்பங்கள் வேளச்சேரி, கல்குட்டை போன்ற இடங்களில் பிளாஸ்டிக் அல்லது தகரத்தால் ஒரு கூரை, கிழிந்தபுடவையை கதவாகநினைத்து தொங்குகின்றவீடுகள். பறவைக்கூடு போல கதவில்லை, கழிப்பறையில்லை, அடுத்த வேளைக்கு உணவுமில்லை. சிறுகுழந்தைகளை வைத்துள்ள குடும்பத்தலைவிகள் நமது நித்ய தீபதருமச்சாலைக்கு வந்து போகமுடியுமா? வீதிகளில் நம்பார்க்கும் பார்வையற்றோர், கைகால் ஊனமுற்றோர், முதியோர், பசியால்வாடுபவர்கள், இவர்கள் நித்ய தீபதருமச்சாலைக்கு வந்து போகமுடியுமா?
உலக அளவிலான ஒரு தொண்டுநிறுவனம் சிறுவர்களின் நலத்திலும், கல்வியிலும் அக்கறை செலுத்திவருகிறது. சிலமாதங்கட்கு முன்பு அது ஒரு தகவல்வெளியிட்டது. ஒரு குடிசைபகுதியில் 10 வயதுள்ள இரண்டு பையன்களை பேட்டிகாணும்போது, உங்கள்ஆசை என்ன என்று எனகேட்டபோது, நாங்கள் சாகாமல் இருக்க ஆசைபடுகிறோம் என்றார்கள்! உங்களுக்கு ஏன் இந்தபயம்வந்தது? எனக்கேட்டபோது – இந்த சந்தில் நாங்கள் பத்து நண்பர்கள் இருந்தோம். காலை முதல் இரவு வரை ஒன்றாகவே எங்கும் திரிவோம். ஆனால் இந்த ஓராண்டில் எட்டு பேர் இறந்துவிட்டனர். ஏதேதோ நோய் காரணம் என்றார்கள்! ஆரோக்கியமான உணவு இல்லாததே இதற்குகாரணம் என அத்தொண்டுநிறுவனம் பல கோணங்களில் செயல்பட தொடங்கிற்று.
நம்மைப்பொறுத்தவரை ஆரோக்கியமான உணவு தேவைதான். கிடைத்தால் சந்தோஷம்தான். ஆனால் பசிக்கு உணவு – சாதாரண உணவு கிடைப்பதே அரிதாகிக்கொண்டிருக்கிறது. இதைக்கண்ட “வள்ளலார்” ஒருவர் கஷ்டப்படுவதை கண்ட போதாயினும், கேட்டபோதாயினும், அறிந்த போதாயினும் ஓடிச்சென்று அதைநிவர்த்திக்க வேண்டும்” என்பதாக சொல்கிறார். இதை ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் காணலாம். அந்த உரைநடையில் அவர்சொன்னதை நடை முறையில் கொண்டுவர “நடமாடும் தருமச்சாலை” ஒன்றை தீபம் அறக்கட்டளை உருவாக்கிகடந்த 10ஆண்டுகளாக பசித்தவர்களுக்கு அன்னம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.